Post Views: 137 தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (SLADA) உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் மருந்து விசாரணைக்கான கைபேசிச் செயலி (Mobile App) ஆகியன இன்று (21ஆம் திகதி) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகமை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், slada.lk இணையத்தளம் மற்றும் SLADA DR App செயலி என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் திரு. அருண பண்டார, தேசிய விளையாட்டு சபையின் தலைவர் திரு. பிரியந்த ஏக்கநாயக்க, விளையாட்டு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் லால் ஏக்கநாயக்க, வேகப்பந்தய வீரர் திரு. யுபுன் அபேகோன், பாரம்தூக்கும் வீரர் திரு. திஸாநாயக்க, சுகததாச உள்ளக விளையாட்டரங்கு அதிகாரசபையின் தலைவர் திரு. ரஞ்சித் விமலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இணையத்தளத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டு வைத்தார். கைபேசிச் செயலியை வீரர்களான யுபுன் அபேகோன் மற்றும் திஸாநாயக்க ஆகியோர் வெளியிட்டு வைத்தனர். இலங்கையில் விளையாட்டுகளில் ஊக்கமருந்துப் பயன்பாட்டை ஒழிப்பதற்கான முதன்மையான நிறுவனம் SLADA ஆகும். உலக ஊக்கமருந்து தடுப்பு சட்டக்கோவையின் (WADA Code) கீழ் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பரிசோதனைகளை நடத்துதல், விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், மருத்துவத்தேவைக்கான விதிவிலக்குகளை (TUE) நிர்வகித்தல் போன்ற பணிகளை இந்நிலையம் முன்னெடுக்கின்றது. slada.lk இணையத்தளம் ஊடாக தடைசெய்யப்பட்ட பொருட்கள், ஊக்கமருந்து கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் விதிமீறல்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழிகாட்டியாக அமையும். SLADA Mobile App ஊடாக விளையாட்டு வீரர்கள் தாம் உட்கொள்ளும் மருந்துகள் WADA தடைப்பட்டியலில் உள்ளதா என்பதை உடனடிச் சோதனையிட முடியும். இதன் மூலம் அறியாமையினால் ஏற்படும் விதிமீறல்களைத் தவிர்க்கலாம். இங்கு உரையாற்றிய அமைச்சர் சுனில் குமார கமகே, ஊக்கமருந்துப் பயன்பாடு குறித்து சமூகத்திற்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதனைப் பாடசாலை பாடத்திட்டத்தில் இணைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் செய்தியை உங்கள் ஊடகங்கள் வாயிலாகப் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன. Post navigation லங்கா ரைட் (Lanka Ride) மிதிவண்டிப் போட்டி: முதலாம் நாள் கண்டி நகரில் நிறைவு! Government Unveils Proposed Four-Band Tariff Policy to Bolster Domestic Industry.